எத்தனை முறைதான் திரும்பத் திரும்ப எழுதுவது!

எத்தனை முறைதான் திரும்பத் திரும்ப எழுதுவது!

புலிகள் உருவாகுவதற்கு முன்னரே ஈழத் தேசத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளும், திட்டமிட்ட ஒடுக்குமுறைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்பதை எத்தனை முறைதான் திரும்பத் திரும்ப எழுதுவது?

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் பின்னணியில் புலிகள் மூன்றாம் விளைவாகத் தோன்றியவர்கள். ஆனால் எப்போதும் புலிகளை மட்டுமே குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் ‘அறிவுஜீவிகள்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு கூட்டம், அந்தப் பிரச்சினையின் முதல் மற்றும் இரண்டாம் காரணிகளைப் பற்றி பேசத் தயாராக இல்லை.

சிங்கள ஆட்சியால் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைகள், மொழி அடக்குமுறைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் உரிமை மறுப்புகள் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் வாய் திறப்பதில்லை.

சரி, “இப்போது புலிகள் இல்லை அல்லவா? அப்படியானால் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை நீங்கள் பெற்றுத்தரலாம் அல்லவா?” என்று கேட்டால், அதற்கும் இவர்களிடம் பதில் இல்லை.

“எதிர்த்தால் அடிப்போம்” என்ற மனநிலையிலேயே இவர்கள் இயங்குகிறார்கள்.

‘நடுநிலை’ என்ற பெயரில் வாழ்ந்து வரும் மனநோயாளிகளைப் போலத் தோன்றுகிறார்கள்.

புலிகள் ஆயுதம் கடத்தியது தவறு என்று கூறும் மேற்கத்திய நாடுகள், அதே நேரத்தில் புலிகளுக்கும் இலங்கைக்கும் ஆயுதங்களை விற்ற தங்களது ஆயுத உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி ஒருபோதும் கேள்வி எழுப்புவதில்லை.

ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியும் இருப்பதைப் பற்றியும் இவர்கள் பேசுவதில்லை.

“புலிகள் ஆயுதம் கடத்தியது சட்டவிரோதம்” என்று கூறுபவர்கள், வாஸ்கோ ட காமா, கொலம்பஸ் மற்றும் காலனித்துவ சக்திகள் எந்த நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் ஆயுதங்களுடனும் ஆக்கிரமிப்புகளுடனும் உலகம் முழுவதும் சென்றார்கள் என்பதைப் பற்றி கேள்வி எழுப்புவதில்லை.

கோலியாத்தை எதிர்த்த தாவீது உலக வரலாற்றில் கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். ஆனால் தங்கள் உரிமைக்காகப் போராடும் இன்றைய தாவீதுகள் மட்டும் ‘பயங்கரவாதிகள்’ என்றும் ‘குற்றவாளிகள்’ என்றும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

பாதுகாப்பான அறைகளில் அமர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது எளிது. ஆனால் செயல்படுவது?

புலிகள் செயலுக்குச் சொந்தக்காரர்கள். வரலாற்றின் அந்த மூன்றாம் விளைவாக உருவான இந்த இயக்கமே தமிழர்களின் தேசியக் கேள்வியை உலக அரங்கில் எடுத்துச் சென்றது. அதனால், தீர்வின் பாதை இன்னும் முடிவடையவில்லை.

கொஞ்சம் பொறுத்திருங்கள். வரலாறு இன்னும் தனது இறுதித் தீர்ப்பை எழுதவில்லை.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *