மானமிழந்து மாற்றானின் மாயையில்
மடைமாறக் காத்திருக்கும் தமிழா,
மடைமாறிடாதே என
உன் உச்சந்தலையில் உறைக்கவே
கல்லறை மணல்தாண்டி எழுகிறேன் நான்.
பால்மணம் மாறுமுன்னரே
பாடையேறிய பச்சிளம் குழந்தை நான்;
எனக்கான நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையில் அல்ல,
உனக்கான விழிப்புணர்வை விதைக்கவே எழுகிறேன்.
உன் குழந்தைக்கு பாலூட்டும் வேளையில்,
என்னைப் போன்ற பச்சிளம் உயிர்களும்
தமிழன் என்பதற்காகவே
மண்ணுக்குள் புதைக்கப்பட்டோம் எனக் கூறிவை.
உன் தலைமுறைகள்,
தம் தலைமுறைகளுக்கு
இத்தகைய கொடுமைகள் மீண்டும் நிகழாதபடி
மௌனத் தடைகளை உடைத்தெறியட்டும்.
எங்கள் கல்லறைகள் நினைவுகளாக அல்ல,
எதிர்ப்பின் விதைகளாக மாறட்டும்;
எங்கள் மௌனக் குரல்கள்
நாளைய தமிழின் விழிப்பாக ஒலிக்கட்டும்.
