நெல்லியடி – என் நினைவுகளில் அழியாத ஒரு இரவு
மில்லர் தனது இறுதிப் பயணத்திலிருந்து திரும்பி வரமாட்டார் என்பதை அவரே நன்கு அறிந்திருந்ததாக, அந்தக் காலகட்டத்தில் அவருடன் இருந்த சிலர் பின்னர் கூறியுள்ளனர். அதனால், புறப்படும் முன் வாகனத்தின் ஓட்டுநர் பக்கக் கதவை மூடுமாறு அவர் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
நீண்ட விளக்கங்களுக்குள் செல்லாமல் கூற வேண்டுமெனில், பின்னர் நிகழ்ந்த பல அரசியல் மற்றும் இராணுவ முன்னேற்றங்களுக்கு இந்தச் சம்பவம் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்திய அமைதிப்படை (IPKF) இலங்கைக்கு வந்ததற்கான பின்னணியைப் பற்றி பல்வேறு வரலாற்று ஆய்வுகளும் கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன; அவற்றில் இந்தச் சம்பவமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பேசப்படுகிறது.
அந்தக் காலத்தில் நான் ஆவரங்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அக்காச்சி அண்ணா மற்றும் டெல்லி அண்ணாவுடன் இருந்தேன். அந்நாட்களில் என் கண்முன்னே பல சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றில் சிலவற்றை இன்று கூட பல்வேறு காரணங்களால் வெளிப்படையாகப் பகிர முடியாத நிலை உள்ளது.
இன்று மில்லரின் பெயர் திரைப்படங்களிலும் இடம்பெறும் அளவிற்கு வரலாற்று விவாதங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
அந்தக் காலத்தில் புதுவை இரத்தினதுரை எழுதிய “பெத்த தாயை விற்று காசு …………பேர்வழி” என்ற பாடல் பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்தப் பாடலின் கருத்தும் எச்சரிக்கையும், குறிப்பாக 2009 மே 18க்குப் பின்னர் செல்வமும் அதிகாரமும் பெற்ற சிலரைப் பற்றிய சமூக விமர்சனங்களுடன் இன்றும் பொருந்துவதாக பலர் கருதுகின்றனர்.
அப்பொழுது எனக்குப் பத்து வயதுதான் இருக்கும். ‘சக்கை லொறி’ என்றால் என்னவென்றோ, ‘தற்கொலைத் தாக்குதல்’ என்றால் என்னவென்றோ துளியும் அறியாத பச்சைப் பாலகப் பருவம் அது.
இராணுவத்தின் “ஒப்பரேசன் லிபரேசன்” (Operation Liberation) நடவடிக்கை முடிவடைந்த பின்னர், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், சிறிலங்கா இராணுவத்தின் பலத்த கோட்டையாக மாற்றப்பட்டிருந்தது. வகுப்பறைகளும், விளையாட்டு மைதானமும் துப்பாக்கி முனைகளின் நிழலில் உறைந்திருந்தன.
வடமராட்சியில் ” ஒப்பரேசன் லிபரேசன் ” மூலம் கிடைத்த தற்காலிக வெற்றியை சிங்கள இராணுவம் கொண்டாடிக் கொண்டிருந்த காலம் அது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வீடிழந்து அலைந்துகொண்டிருந்தனர்.
அந்தப் பிரம்மாண்டமான இராணுவக் கோட்டையை, கரும்புலி மில்லருடன் இணைந்து வெறும் ஐம்பது போராளிகள் மட்டுமே புகுந்து தாக்கி தகர்த்தழித்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
ஆனால், அதுதான் வரலாறு.
அந்த அசாத்திய வீரச் செயலின் மைய நாயகன் — வல்லிபுரம் வசந்தன் என்ற இயற்பெயர் கொண்ட கரும்புலி கப்டன் மில்லர்.
“ஒப்பரேசன் லிபரேசன்” என்ற பெயரில் வடமராட்சி மீது இராணுவ நடவடிக்கை தொடங்கிய நாளில், கொழும்பில் இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன, “விடுதலைப் புலிகளை முற்றிலும் அழிக்கும் வரை இந்தப் போர் ஓயாது” என்று அறிவித்தார்.
அதேபோல் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, “தீவிரவாதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் காலம் முடிந்துவிட்டது; இன்று அவர்களைப் போரில் அழிக்கும் காலம் வந்துவிட்டது” என்று செருக்குடன் கூறினார்.
கொழும்பில் அமர்ந்திருந்த ஆட்சியாளர்கள், தமிழர் தாயகத்தை நிரந்தரமாக ஆக்கிரமித்துவிட்டோம் என்ற அகந்தையுடன் வெற்றிக் களிப்பில் இருந்தனர்.
நெல்லியடியில் அமைந்திருந்த அந்தப் பெரும் இராணுவ முகாம், ஆக்கிரமிப்பின் சின்னமாக மாறியிருந்தது. அந்த இறுமாப்பை உடைக்க வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார்.
அதற்காக வகுக்கப்பட்ட போரியல் வியூகத்தின் மையமாக, “உயிரையே ஆயுதமாக மாற்றத் தயாரான” போராளியாக கப்டன் மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம், கரவெட்டி, துன்னாலை தெற்கு என்ற மண்ணில் 1966 ஜனவரி 1ஆம் தேதி பிறந்தவர் மில்லர். வசதியான குடும்பத்தில் பிறந்தவர். முன்னணி வங்கியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய தந்தையின் மகன். பிரகாசமான எதிர்காலம் காத்திருந்த போதும், தாயக விடுதலைக்காக அனைத்தையும் துறந்து போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
இயக்கத்தில் இணைந்த பின்னர் பல போர்க்களங்களில் தனது துணிச்சலை நிரூபித்திருந்தார். வடமராட்சிப் போர்களில் பிரபா தலைமையிலான அணியுடன் இணைந்து கடுமையாகப் போராடினார்.
எனினும், கடுமையான மோதல்களின் பின்னர் வடமராட்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. தனது சொந்த மண் எதிரியின் காலடியில் நசுங்குவதைப் பார்த்த மில்லர், அதனை மீட்க ஒரு மாபெரும் அதிர்ச்சித் தாக்குதல் அவசியம் என்பதை உணர்ந்தார்.
மன்னார் பகுதியில் விக்ரருடன் பணியாற்றிய அனுபவமிக்க தோழர் பிரபாவுடன் இணைந்து, வெடிமருந்து நிரப்பப்பட்ட லொறியை நெல்லியடி இராணுவ முகாமிற்குள் செலுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டது.
இரவு பத்து மணிக்குப் பிறகு பல இராணுவத்தினர் அருகிலுள்ள வீடுகளில் தங்கிச் செல்வது வழக்கம் என்பதால், அதற்கு முன்பே தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இரண்டு வெடிமருந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முகாமிற்குள் செல்லத் திட்டமிடப்பட்டது. முதல் வாகனத்தை மில்லரும், இரண்டாவது வாகனத்தை ராசிக்கும் செலுத்துவதென முடிவு செய்யப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இத்தகைய நடவடிக்கை முதன்முறையாகத் திட்டமிடப்பட்டது.
வழியில் இராணுவம் அமைத்திருந்த மரத்தடைகள் உள்ளிட்ட தடைகளை அகற்றும் மிக ஆபத்தான பொறுப்பை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கமல் ஏற்றுக்கொண்டார். அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினத்தின் மகன்.
தாக்குதலுக்கான ஏற்பாடுகள் மிகவும் இரகசியமாக நடைபெற்றன. இராணுவக் கண்காணிப்பையும் மீறி, வெடிமருந்துகளும் லொறிகளும் இரவோடு இரவாக நெல்லியடிக்கு கொண்டு வரப்பட்டன.
அடுத்த நாள் உயிரிழப்பது உறுதி என்பதை அறிந்திருந்தும், மில்லரின் முகத்தில் கவலையோ அச்சமோ இல்லை. தன் சவப்பெட்டியைத் தானே தயாரிப்பவன் போல, வெடிமருந்துகளை லொறியில் ஏற்றி இணைப்புகளை அமைத்துக் கொண்டிருந்தார்.
மாலை இருள் சூழ்ந்தது.
தாக்குதல் குழுக்கள் முகாமை நெருங்கின.
மில்லர் வண்டியில் ஏறி காத்திருந்தார். அந்த இறுதி நேரத்திலும் அருகில் நின்ற பிரபாவுடன் நகைச்சுவையாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்.
தோழர்கள் முகாமை நோக்கிச் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். கமல் முன்சென்று தடைகளை வெடிக்கச் செய்தார்.
ஆனால் எதிரே இருந்த இராணுவக் காப்பரணிலிருந்து மெஷின் கன் சூடு கடுமையாக வந்தது.
வாக்கி-டாக்கியில் கமல் கத்தினார்:
“தடைகள் அகன்றுவிட்டன… ஆனால் காப்பரணிலிருந்து கடுமையான சூடு வருகிறது. சற்று பொறுங்கள்.”
அதைக் கேட்ட மில்லர்,
“பிரபா, கவலைப்படாதே. வண்டியின் முன்பகுதியில் குண்டு துளைக்காத கவசம் இருக்கிறது. நான் கொண்டு போய் சேர்த்துவிடுகிறேன்.”
என்று உறுதியுடன் கூறினார்.
முன்னொரு தாக்குதலில் வாகனம் சரியாகச் செல்லாததை நினைவுபடுத்திய அவர்,
“இந்த முறை கட்டிடத்திற்கு மிக அருகில் கொண்டு சென்று மோதுவேன்.”
என்று புன்னகையுடன் சொன்னார்.
அந்த நேரத்தில் கமலின் குழு ஏவிய ராக்கெட் குண்டு காப்பரணைத் தகர்த்தது.
புகை மூட்டத்துக்குள் மில்லருக்குப் புறப்பட உத்தரவு வந்தது.
மில்லர் வண்டியை மெதுவாக இயக்க, பிரபா பின்னால் ஏறினார்.
நெல்லியடிச் சந்தியை அடைந்ததும் மில்லர் வண்டியை நிறுத்தினார். பிரபா கீழிறங்கி வெடிமருந்து இயக்கக் கருவியைச் செயல்படுத்தினார்.
வண்டி வேகம் பிடிக்கத் தொடங்கியது.
பிரபா ஓடிவந்து,
“மில்லர்… எப்படியாவது திரும்பி வந்துவிடு…”
என்று குரல் தளரச் சொன்னார்.
மில்லர் அதற்குப் பதிலாக கையசைத்துவிட்டு வண்டியை வேகமாக முன்னோக்கிச் செலுத்தினார்.
அந்த நேரத்தில், நெல்லியடிச் சந்தியிலிருந்து சுமார் ஏழுநூறு மீட்டர் தொலைவில், நான் வீட்டுக்குள் பதுங்கியிருந்தேன்.
துப்பாக்கிச் சத்தங்களும், ஷெல் வெடிப்புகளும் அந்த இரவைப் பிளந்துகொண்டிருந்தன.
கமல் நின்ற இடத்தைத் தாண்டி மில்லரின் சக்கை லொறி முகாமிற்குள் பாய்ந்தது.
1987 ஜூலை 5ஆம் நாள் மாலை 7.03 மணிக்கு, அந்த வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது.
இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்த மக்களுக்கு வானைப் பிளக்கும் பேரொலியாகவும், பூமியையே அதிரவைத்த வெடிச்சத்தமாகவும் உணரப்பட்டது.
வெடிப்பு அலை அடங்கியதும் போராளிகள் முகாமை நோக்கி முன்னேறினர்.
சற்று முன்பு வரை இராணுவம் நிலைகொண்டிருந்த நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் மாடிக்கட்டிடம் முழுமையாக தரைமட்டமாகி இருந்தது.
அதனுள் இருந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
அந்த இறுதி மோதலில் நெஞ்சில் காயமடைந்த கமலும் வீரச்சாவடைந்தார்.
மில்லரின் இந்த நடவடிக்கை, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்பட்டது.
பத்து வயதுச் சிறுவனாக அந்த இரவில் உறைந்து நின்ற நான், இன்று அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும்போது, அது என் தலைமுறையின் நினைவில் அழியாமல் பதிந்த ஒரு வரலாற்று தருணமாகவே தோன்றுகிறது.
தன் உடலையே ஆயுதமாக மாற்றிய மில்லர், தமிழீழத்தின் முதல் கரும்புலியாக வரலாற்றில் நிலைத்துப் போனார்
