எங்கள் காலத்தின் வேடன்கள் தேவைப்படும் நேரம்
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு, “வேடன் போன்ற ஒரு இளைஞன் எங்கள் மண்ணில் இல்லையா?” என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தோம். அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்த சில வரிகள் இன்று மீண்டும் நினைவிற்கு வருகின்றன.
ஏனெனில், ஒரு கவிஞன் அல்லது கலைஞன் என்பவன் வெறும் சொற்களை எழுதுபவன் அல்ல. உலகின் வலிகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரையும், மறைக்கப்பட்ட வரலாறுகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு சாட்சியன்.
அதனால்தான் வேடன் எங்களுக்குப் பிடித்துப் போனான்.
சிரியாவின் மார்பில் இரத்தம் தெறித்த காயங்கள் இன்னும் ஈக்களால் மொய்க்கப்படுகின்றன.
கொரியாவின் வானத்தில் இன்னும் போர் கழுகுகள் வட்டமிடுகின்றன.
இந்தியாவின் கொடி பழிவாங்கும் மதவெறியின் இருளில் அலைகிறது.
ஆயிரம் மெக்சிக்க மக்களின் கனவுகள் ஒரு சுவரின் மறுபுறம் சிறைபிடிக்கப்படுகின்றன.
இலங்கையில் புலிகள் வீழ்ந்தாலும், தமிழரின் தாகம் இன்னும் அணையவில்லை.
காங்கோவின் சுரங்கங்களில் குழந்தைப் பருவங்கள் புதைக்கப்படுகின்றன.
சோமாலியக் குழந்தைகள் ஒரு சொட்டு குடிநீருக்காக பல ஆறுகளைக் கடக்கின்றனர்.
மியான்மரில் கருணையின் பெயரில் ஆயுதங்கள் பேசுகின்றன.
ஆப்பிரிக்காவின் போர்க்களங்களில் இன்னும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்காக அழுகின்றனர்.
நியூயார்க்கின் உயரமான கட்டிடங்களின் நிழலில், மண்ணின் மைந்தர்களின் மூச்சுகள் நின்றுபோயின.
பாலஸ்தீன மக்களின் வெளியேற்றம் உலகிற்கு ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.
சீனாவின் சிவப்புக் கொடியின் கீழ் மதச்சுதந்திரம் புகையாகக் கரைகிறது.
உலகின் பல மூலைகளில் குழந்தைகளின் சிறிய பாதங்கள் கண்ணீரின் கடலைத் தாண்டிக் கொண்டிருக்கின்றன.
மனிதர்கள் ஆட்சி செய்யும் இந்த பூமி, ஒவ்வொரு நாளும் மனிதநேயத்தை இழந்து, நரகத்தின் இன்னொரு வடிவமாக மாறிக்கொண்டிருக்கிறதல்லவா?
இத்தகைய காலத்தில், எங்கள் உணர்வுகளையும், போராட்டங்களையும், இனத்தின் நினைவுகளையும், மறைக்கப்பட்ட வரலாறுகளையும் அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லும் குரல்கள் தேவைப்படுகின்றன.
வெறும் பாடல்களும் கதைகளும் அல்ல; உண்மையைச் சொல்லத் துணியும் கலைஞர்களும் தேவைப்படுகின்றனர்.
அதனால்தான் எங்கள் காலத்திற்கு, வேடன் போன்ற குரல்கள் அவசியம்.
வரலாற்றை வெற்றியாளர்கள் எழுதலாம்.
ஆனால் மக்களின் வலியை கலைஞர்களே நினைவில் நிறுத்துவார்கள்.
-TamilEelam Cyber Force
